Thursday, December 30, 2010

நாளைய விடியலின் நல்வாழ்த்துக்களுடன்.

 
நேற்றைய தாக்கங்களை மறந்து
நாளைய ஏக்கங்களை களைந்து
நிதர்சனமான நிமிடங்களுடன்
நிலையற்ற வாழ்வின்
ஒவ்வொரு தருணங்களும்...
நிலையான பேரின்ப வாழ்வின்
தகவல்களாய் கண்முன் விரியும்
நாளைய விடியலின்..
நல்வாழ்த்துக்களுடன்.

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும்
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பல தோல்விகளை சிம்மாசனமாக ஏற்று அமரும் நம் உயரம்
சில வெற்றிகளால் அடையும் உயரத்ததை விட மேலானதாக இருக்கும். 






வாழிய தாய் தமிழ் 
அன்புடன்
செகதேசுவரன்.இரா

Saturday, December 4, 2010

நவீன சேகுவேரா விக்கி லீக்ஸ்


கனரக ஆயுதம் இல்லை, சிதறடிக்கும் போர்த் தந்திரங்கள் இல்லை, கூட்டம் கூட்டமாய் கிளம்பிவரும் படையணியினர் இல்லை அனாலும் இந்த அமெரிக்கா உறக்கம் தொலைத்து பின்னங்கால் பிடரியில் அடிக்க அங்கும் இங்கும் ஓடி, வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

1960களில் சேகுவேரா என்ற பெயரை கேட்டாலே அலறியடித்து ஓடிய அமெரிக்கா, இன்று விக்கிலீக்ஸ் என்றாலே அதே நிலையை உணர ஆரம்பித்திருக்கும்.

அமெரிக்கா மட்டும் அல்ல அனைத்து வல்லாதிக்க நாடுகளும்தான்.

ஆம் அவர்களே எதிபார்த்திருக்க மாட்டார்கள் இப்படி இணையத்தால் சேகுவேரா ஒருவன் வருவான் என்று. உலகின் அனைத்து நாடுகளிலும் தன் மூக்கை நுழைத்து மெல்ல மெல்ல தன் காலை பதிக்கும் ஏகாதிபத்தியத்தின் மொத்த உருவத்தையும் அழிக்கா விட்டாலும், அலறியடிக்க ஓடவிடும் விக்கிலீக்கை எத்தனை பாராட்டினாலும் தகும்.

இவர்களின் கொள்கையே மிக வித்தியாசமாகவும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருக்கிறது, குற்றம் செய்தவர்களைத் தவிர. உண்மை எதுவென தெரிந்தும் அதை மறைக்கும் தரங்கெட்ட ஊடகங்களுக்கு இவர்களின் கொள்கைகள் ஒரு செருப்படி, முக்கியமாக நம் தமிழ் ஊடகங்கள். அரிதார அழகிகளுக்கும், கலைக் கூத்தாடிகளுக்கும், தரும் முக்கியத்துவத்தை காலத்திற்கு தேவையான சமநிலைக்கும், செய்திகளுக்கும் தருவதில்லை.

மேலும் அமெரிக்க அண்ணன்கள் பல சித்து வேலைகள் செய்து முடக்கிவிட்டனர் விக்கிலீக்கை, வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உறுதிப் படுத்திவிட்டது விக்கிலீக், அடுத்த சில மணி நேரங்களிலேயே மற்றொரு ஐரோப்பிய டொமைனில் முளைத்து விட்டது விக்கிலீக்ஸ்.

இதை பார்க்கும் போது அண்ணன் காசி ஆனந்தனின் வரிகள் தான் ஞாபகம் வருகிறது..

விழ விழ எழுவோம்
விழ விழ எழுவோம்
ஒன்று விழ நாங்கள்
ஒன்பதாய் எழுவோம்...!!


அமெரிக்கா முடக்கிய இணையதள முகவரி http://wikileaks.org/
மீண்டும் முளைத்திருக்கும் விக்கிலீக்ஸ்ன் முகவரி http://wikileaks.ch/

இதற்க்கு நன்கொடை சேவை செய்துவந்த paypal லும் தன் சேவையை நிறுத்தி விட்டதாக தற்போது கிடைத்த செய்தி.

எத்தகைய வைரஸ் தாக்குதல் ஏவப்பட்டாலும் எப்படி பாதுக்காப்பது என தெரியும் என்கிறது விகிலீக்ஸ். இதற்க்கு செய்தி திரட்டி கொடுத்தவர்கள் மட்டும் எவ்வித தொல்லைகளுக்கும் ஆட்படாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

உண்மைகள் என்றுமே தாமதமாகுமே தவிர
மரணிப்பது இல்லை,
என்ற சான்றோரின் கூற்று சரியே.

உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்விலா நிலைவேண்டும்.


வாழிய தாய்த்தமிழ்

அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா

Friday, October 22, 2010

புல்வெளி சொல்லிய பாடம்.



நாளைய ஏக்கம் இல்லை;
நேற்றைய தாக்கம் இல்லை;
நிதர்சன நிமிடங்களுடன்,
நிலையற்ற புல்வெளி...!!

காற்றுடன் காதல் இல்லை;
அதை எதிர்த்து வாழ்வுமில்லை;
அசைந்தே அகம் மகிழும்,
அழகான புல்வெளி...!!

மிதித்து நடந்தேன் காயமில்லை;
வெட்டி எறிந்தேன் கோபமில்லை;
என் கண்ணீரை மட்டும்
தாங்கிப் பிடித்து,
கருணை காட்டிய புல்வெளி...!!

ஒற்றை அனாதைக்கு
ஒரு கோடி சொந்தமென,
சில நிமிடங்கள் உறவாடிய;
பாசப் பச்சைப் புல்வெளி...!!

கிடைக்கும் தோல்விகள்
வரம் என்று,
மிதித்ததும் துடித்தெழுந்த;
துவண்டுபோகாப் புல்வெளி...!!

பாவப் பட்ட மனிதன் நடந்த
ஒற்றையடிப் பாதையில் மட்டும்,
முளைக்காமல் முறைத்துக்கொண்ட
தன்மானப் புல்வெளி...!!









வாழிய தாய் தமிழ்
அன்புடன் 
ஜெகதீஸ்வரன்.இரா
 

Thursday, October 21, 2010

அங்கலாய்த்துக் கொண்ட மைனாக்கள்

















அகண்ட சாலைகள்
அனல்பறக்கும் வாகனங்கள்

அவசரப் பயணம்...

அலறியடித்து ஓடும்
மனிதக் கூட்டம்,


சிவப்பில்
ஒரு கூட்டம் அடைபட,
பச்சையை நோக்கி
பாயும் ஒரு கூட்டம்


ஒருவன் தவறினால்
இன்னொருவன் தாறுமாறாய்;

இதில் காதைக் கிழிக்கிற
சத்தம் வேறு...


எதைத் தேடி இவர்கள் ஓட்டம்;
எதற்க்காக இந்த அவசரம்;
என அங்கலாய்த்துக் கொண்டன..
அந்த சிக்னல் கம்பத்தில்
அமர்ந்திருந்த மைனாக்கள்..!! 



ஏன் மனித மனம் பொருள் தேடலிலேயே
வெந்து சாக வரம் பெற்றது...??


 

வாழிய தாய்த் தமிழ்
அன்புடன்
ஜெகதீஸ்வரன்,இரா
 

Saturday, October 16, 2010

தனிமை..

















நிதர்சனம் புரிந்து
மாறிய அவள் வழி..
நீங்கா
தனிமையினூடே
நீளும் என்வழி..

சிந்திக்க வைத்த
தனிமை
வரமாய் நிற்க்க,
சிதறடித்த
தனிமை சாபமிட..

இலக்கென
அவளைத் தேடித்
தொலைந்தது,
இலக்கணப்
பிழையாய் போன
வாழ்வு...

விளக்கென
வெளிச்சம் தந்து
அவள்
விழுங்கிச் சென்ற
இரவுகள் இன்று
இரவல்களாய்...!!

பாசத்துடன்
பாதங்கள் முத்தமிட்ட
தாய்மண் தொலைத்து,

பாவங்கள் முற்றுகையில்
பாலைமண் நுழைந்து,

என்னுள் வாழ்ந்திடும்
என்னவள்
நினைவுகளால்,
எத்தனை இரவுகள்
இப்படி நீளுமோ....??



வாழிய தாய்த் தமிழ்

அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா

Monday, October 11, 2010

திசையறியா வாழ்வோ தனிமைக் கடல்...!!!

திசையறியா காதல் கடல்
சிரித்தே சிதைத்த மௌனப்புயல்
ஆர்பரித்தே அலையும் மனதின் சுழல்
அதனிடம் அடிமையாய் கரையின் குறை
உள்ளத்தே உறையும் கண்ணீர் நுரை....

பற்றி எரியும் இதயப் பிணம்
இன்னும் விரியும் சிந்தனை தினம்
சுவடெனப் பதிந்த நினைவுகள் வரம்
தொலைத்தே தாழ்ந்த துயருடன் சிரம்...

காற்றில் தேடிய கவிதையின் முகம்
வரைந்தே உறைந்த களைப்பில் அகம்
அவளுக்காய் தொலைத்த அவளின் நிழல்
திக்கற்ற வாழ்வென விரியும் கடல்...

திசையறியா வாழ்வோ தனிமைக் கடல்...!!! 






வாழிய தாய்த் தமிழ்
அன்புடன்
ஜெகதீஸ்வரன். இரா
 

Thursday, October 7, 2010

ஏன் இந்தப் பிறவி...!!

பிரபஞ்ச வெடிப்பில்
எரியும் நெருப்பில்
பூகோளப் பிறவி...

 
ஒற்றைத் துளியில்
ஆயிரக் கொலைப் பின்
உயிரணுப் பிறவி...


மரணக் கிடப்பில்
மயங்கிய தாயவள்
மடியினில் பிறவி...



அங்கக் களிப்பில்
பேதை அணைப்பில்
அடுத்தொரு பிறவி...



நிம்மதி தொலைப்பில்
பொருள் பல தேடி
நித்தமும் பிறவி...



இதயத் துடிப்பில்
சிந்தனைத் தெறிப்பில்
எழுத்துப் பிறவி...

  
எட்டுக் கால் நடையில்
எங்கோ பயணம்
ஏன் இந்தப் பிறவி...!!
 
 
 
அன்புடன்
 
ஜெகதீஸ்வரன். இரா
 


Friday, September 24, 2010

வளைகுடா நாடுகளில் வாடும் கடைநிலை தமிழர்களுக்காக..!!

காலைக் கழனிதனில் நெஞ்சுயர்த்தி
நீ உழைத்த உழைப்பங்கே..
பாலைக் கருவேலமர நிழல் ஒதுங்கி
கருகும் உன் நிலை இங்கே..!!

ஊரில் சிரித்தாலும் அழுதாலும்
உடனிருந்த உன் உறவுகள்..
வெறும் அலைபேசி வலைகளுக்குள்
அடிமாடாய் இன்றிரவுகள்..!!

நிறைவான
பணமின்றி மனம் நிறைந்த வாழ்வங்கே..
பணமுண்டு, உணவுண்டு
தேடுகிறாய் மனம் முழுதும் நிறைவேங்கே..!!

கடனுக்காய் அடகுவைத்தாய்
தோழா உன் நல்வாழ்க்கை..
யார் வந்து மீட்டெடுப்பார்
தொலைந்த உன் இல்வாழ்க்கை..!!

முகம் மறந்த உன் குழந்தை
அழைக்கிறதா மாமன் என்று..
வெயிலில் வெந்து செத்த
மீதி உயிர் நொந்து சாகுமே அன்று..!!

போரில்லை, புரட்சியில்லை
எதிலியானாய் தெரிந்தே நீ..
புறப்படடா என் தோழா
நிதர்சனங்கள் புரிந்தே நீ...!!     

வளைகுடா நாடுகளில் வாடும் கடைநிலை தமிழர்களுக்காக..!!

அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா  

Saturday, June 12, 2010

பிரிவுகள் வாழ்வை பலப்படுத்தட்டும்..!!


இறந்து போவதற்காகவே 
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மானிடா...

ஒன்றும் இல்லாத எனக்கே
இறந்தால் உன்மையாய் அழுவதற்க்கு
ஒரு உயிர் உள்ளது..!

அனைத்தும் இருந்தும்
அனாதையாய் தெருவில் நிற்கிறாயே
என என்னை  ஏளனம் செய்தது
இறந்து போன அந்த சிட்டுகுருவி..!!

 















பிரிவுகள் வாழ்வை பலப்படுத்தட்டும்..!!
இறப்புகள் வாழ்வை  அர்த்தம் உள்ளதாக்கட்டும்..!! 

Tuesday, April 13, 2010

புதிய விடியலாய் விக்ருதி வருடம்


தமிழை உயிரெனக் கருதும்
                                                    செந்தமிழருக்கும்..!
உள்ளத்தில் தீ வளர்க்கும்
                                      உண்மைத் தமிழருக்கும்..!
தினம் தினம் செத்துப்பிளைக்கும் என்
                                            மீனவத் தமிழருக்கும்..!
ஊருக்கே சோறு போடும்
                                            உழவுத் தமிழருக்கும்..!
வளைகுடாவின் பாலையில் வறண்டுபோன
                                                பாசத் தமிழருக்கும்..!
அறியாமை இருளின்  பிடியிலுள்ள
                                     அப்பாவித் தமிழருக்கும்..!                           
உரிமைக்காக போராடும்
                                            உலகத் தமிழருக்கும்..!
உரிமையை விற்று ஓட்டுப் போடும்
                                              ஊனத் தமிழருக்கும்..!

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..! 

புத்துயிராய்
புதுப் பொலிவாய்
புதிய விடியலாய்
விடியும் நாளை நோக்கி
விக்ருதி வருடத்தில் பயனிப்போம்...!!

Saturday, March 6, 2010

பாரதிதாசன் வரிகளில் சில

பாவேந்தர் பாரதிதாசன் இளைஞர்களுக்காக விட்டு சென்ற இளைஞர் இலக்கியம்.







 








ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும்
சீரைத் தந்த தமிழே வாழ்க !
ஓரா உலகின் ஒளியே வாழ்க !

அனால் 

ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும், நாள் எந்நாளோ..........? 

”வாழிய தாய்த்தமிழ்”