Monday, March 21, 2011

வெற்றிடம் நோக்கி வேகமாய் விரைகிறேன்..!!


எங்கோ பிறந்த மெளனத்தின்
இங்கே தொலைகிறேன்
விழுந்து தெரிக்கும்
கண்ணீர் துளி
தவழ்ந்து சிரிக்க;
சுற்றும் உலகச்
சுழற்ச்சியுனூடே
உயரே பறக்கிறேன்..!!

இரவல் பெற்றே
வாழத் தவித்த
இதயத் துடிப்பில்,
ஓசையற்ற ஒற்றைச் சத்தம்
உயிரைத் தீண்ட;
அதை தேடித் தவிக்கும்
இருளின் மாயையில்
தொலைந்தே போகிறேன்..!!

நினைவுகள் பிணமென எரியும்
மனதின் கல்லறையில்,
வாடித் தவிக்கும்
மெளனப் பூக்கள்
அஞ்சலி செலுத்த;
அதன் வளமை நிலைக்க
நிம்மதியற்று
நித்திரை தொலைக்கிறேன்..!!
 
உரசும் காற்றினூடே
கடைசி பிம்பம்
மெல்லமாய் மறைய;
அதன் துகள்கள்
தூக்கி வீசப்பட்ட
வெற்றிடம் நோக்கி
வேகமாய் விரைகிறேன்..!! 

விழி வழி பயணித்த
நெருப்பில்,
உருகித் தவித்த
எண்ணக் குவியல்;
இறுதி வாயிலில்
நிலைநிற்க நினைத்து
கடைசிச் சுடராய் 
கையறு நிலையில்,
அனைந்தே போகிறேன்..!!


வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா

Sunday, March 20, 2011

ஏகாதிபத்திய கழுகும், மறுகாலனியாதிக்க காக்கைகளும்.


ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.                                            - திருவள்ளுவர்

ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் இதோ கண்முன்னே கழுகும் காக்கையும் கூத்தாடிக் கொண்டிருக்கின்றன லிபிய நாட்டின் மீது. 

உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் தற்போதைய நிலவரம் லிபியாவில் நடக்கும் உள்நாட்டுக் கிளர்ச்சியும், தன் மக்களையே கொல்லும் அதிபர் கடாபியும் அவருக்கு எதிரான கிளர்ச்சியாளர்களும். இவர்களின் நடுவே புகுந்து ஐக்கிய நாடுகள் சபைகள் மற்றும் அரபுநாடுகள் கூட்டமைப்பு நாடுகளும் ஒப்புதல் செய்துவிட்டன என போர்தொடுக்க முயலும் உலக வல்லாதிக்கங்களான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, நெதர்லாந்து, இத்தாலி, மற்றும் பல நாடுகள் தான்.  


சமகாலத்தில் ஏமன் நாட்டிலும் மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள், பக்ரைன் நாட்டிலும் மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள் நிராயுதபானியாய் நிற்க்கும் தன்நாட்டின் மக்கள் மீதே சொந்த இராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்யும் வேளையில் அதை தட்டிக் கேட்காத மேற்கத்திய வல்லாதிக்கம், ஆயுத்துடன் போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக லிபிய நாட்டு இராணுவத்தை எதிர்த்து நேரடித் தாக்குதல் நடத்தும் மர்மம் என்ன.? 

ஏமன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கப்போவது இல்லை, பக்ரைனில் தாக்ககுதல் நடத்தத் தேவையில்லை ஏனென்றால் அந்நாட்டு மன்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளில் ஒருவர், மேலும் அடிவருடிகளின் அங்கங்களான சவுதி, கத்தர், நாடுகளின் படைகள் பக்ரைனில் முகாமிட்டுள்ளன. இந்த லிபியா மீது தாக்குதல் நடத்தினால் அவர்களின் ஒட்டுமொத்த என்னை வளத்தை உறிஞ்சிக் கொள்ளலாம் என்ற எண்ணமாக கூட இருக்கலாம். 


அதனால் தான் நேற்று இரவுமட்டும் NATO படைகள் 100க்கும் மேற்பட்ட ஏவுகனைகள் பல்வேறு முனைகளிலிருந்தும் ஏவப்பட்டிருக்கின்றன. இதில் 50 சதவிகிதம் மக்களை கொல்லும் லிபிய இராணுவத்தை தாக்கியிருக்கலாம் என வைத்துக் கொள்வோம் மீதமுள்ள 50 சதவிகிதம் எத்தனை அப்பாவி மக்களின் உயிரை பலி கொண்டிருக்குமோ என நினைக்கையில் இரவில் உறக்கம் தொலைகிறது. அந்நாட்டு மக்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும் இவ்வளவு உயிரிழப்பு ஏற்படாது, இந்த கழுகிடமும் காக்கைகளிடமும் கொத்துபட்டே அந்நாட்டு மக்கள் சாகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  

இதைவிட 200 மடங்கு மக்கள் இலங்கை இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்படுகையில் இதே வல்லாதிக்கம் வேடிக்கைதான் பார்த்தது. அன்று மக்கள் கொல்லப்படவில்லையா..?? அல்லது உள்நாட்டிலேயே அகதிகளாக்கப் படவில்லையா..?? ஆயுதம் தாங்கிய மக்கள் ஆதரவு குழுக்கள்தான் இல்லையா..?? ஏன் இந்த ஏகாதிபத்திய, மறுகாலனியாதிக்க வெறி..?? 

கேள்விகள் குவியக் குவிய
அதனூடே புதைந்து போகிறோம்..!!
வேள்விகள் வளர்த்து வளர்த்து
வெற்றி விடியலின்றி உறைந்துபோகிறோம்..!!        

இவர்களுக்கு சாவுமனி அடிக்க மட்டுமே இந்த இயற்கை தன் கோபக் கணைகளை கொட்டுகின்றதோ..??

மனித உரிமைகளை மீறுகிறார் என லிபிய அதிபர் மீது குற்றம் சுமத்தும் வல்லாதிக்கங்கள், தங்களின் தாக்குதல் மட்டும் மனித உரிமைகளை மீறாதென்பது எந்த மனித உரிமை சட்டமோ..??

எல்லாம் இந்த ஒட்டு மொத்த பேரண்டத்தையும் படைத்து காப்பவனுக்கே வெளிச்சம். வேண்டிக் கொள்வோம் லிபிய நாட்டின் அப்பாவி மக்களுக்காக.

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.                                            - திருவள்ளுவர்

தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.

வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா

Sunday, March 13, 2011

அரபு நாடுகளில் வாடும் கடைநிலை தமிழர்களுக்காக..!!


அங்கு
காத்துக் கொண்டிருக்கும்
பத்தினிக்காக
இங்கு பட்டினி கிடக்கின்றாய்..

உன் கண்ணீர் துளிகள்
இமைகளைத் தாண்டும் முன்
வெப்பத்தில் 
உறைந்து போகிறது..

நன்கு படித்தவன்
நாடுகடந்தான்;
நாதியற்று நீ
புலம் பெயர்ந்தாய்,
அறிந்தே அடிமைகளாய்…
என்ன வரம் பெற்றாய்
என்ன குற்றம்தான் செய்தாய்.?
சாட்டையடி சுவடும் இல்லை,
கல்லெறிக் காயமும் இல்லை,
உன் இரத்தம் மட்டும் கொட்டுகிறது
வியர்வையென உருமாறி..

உன்னை கண்டும் காணாமல்
கடந்து செல்கிறேன்
கண்ணாடி அடைத்த
கதவுகள் வழியே..

ஏனோ நான் பயணிக்கும்
இந்த சாலையின் நிறம்
எனக்கு தெரிகிறது
எம் தொழிலாளர்களின்
காய்ந்து உறைந்துபோன
கருப்பு இரத்தங்களாய்…

அறிவைப் பெற்றவன்
தாய்நாடு காத்தால்
அடித்தட்டு வர்க்கம்
அடைபடும்
அடிமை ஏற்றுமதியிலிருந்து
என்னையும் சேர்த்து…!! 



வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா

Friday, March 11, 2011

இயற்க்கையின் அடுத்தொரு கோரத்தாண்டவம்..!! (ஜப்பான் நிலநடுக்கம் 8.9magnitude)

இயற்க்கையின் அடுத்தொரு கோரத்தாண்டவம்..!! (ஜப்பான் நிலநடுக்கம் 8.9magnitude)

மிக பயங்கர நிலநடுக்கம் (8.9Magnitude) வெள்ளிக் கிழமை ஜப்பானின் வடகிழக்குப் பகுதியை மிக உக்கிரமாக தாக்கியுள்ளது. அதனால் ஏற்பட்ட சுனாமியானது ஜப்பானின் வடகிழக்கின் பாரிய பகுதிகளை அக்கிரமித்துக் கொண்டுள்ளது. உலக வரலாற்றில் ஏற்பட்டுள்ள 7வது மிகப்பெரிய பூகம்பமாக இது கருத்தப்படுகிறது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள்.

  • இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர், பலரைக் கானவில்லை.  
  • சுனாமி அலைகள் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளின்     உயரத்தைவிட அதிகம்.
  • அதிக அளவிலான மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்கள் தூக்கி எறியப்பட்டுள்ளன.
  • டோக்கியோ அருகில் ஒரு என்னை சுத்திகரிப்பு நிலையம் முற்றிலும் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
  • தீயனைக்கும் படை அருகில் நெருங்கக்கூட முடியாத அளவில் தீயின் உக்கிரம் மேலும் அதிகமாக உள்ளது.
  • 5 அனுமின் நிலையங்கள் தானியங்கி கருவிகள் மூலம் தற்க்காலிகமாக செயலிழக்கப் பட்டுள்ளன.
  • அனு கசிவிற்க்கான வாய்ப்புகள உண்டா என ஆய்வுகள் மேற்க்கொள்ளப் பட்டுள்ளன.
  • ரஷ்யா, தாய்வான், தாய்லாந்து, மற்றும் அனைத்து பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
  • செண்டாய் விமான நிலையம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
  • பேரிடர் மேலான்மைக் குழு மீட்பு பணிகளுக்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது ஜப்பான் பிரதமர் அதற்க்கு தலைமை தாங்குகிறார்.
  • தொலைத்தொடர்புத் துறை முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளது.
  • மக்கள் அனைவருக்கும் தொலைக்காட்சி மற்றும் ரேடியோ முலம் தகவல்கள் மற்றும் பேரிடர் மேலான்மை குறித்த தகவல்கள் பிரதமரால் நேரடியாக வழங்கப் பட்டுக்கொண்டுள்ளது. 

































இந்த கொடூர நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ள ஜப்பான் மக்களுக்காகவும், பாதிக்கப் பட்டுள்ள ஏனையோருக்காகவும் எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

பேரிடர் மேலான்மை குறித்து மீண்டும் சந்திப்போம். 

வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா

Tuesday, March 8, 2011

ஒரு தீக்குச்சி என்ன செய்யும்…??

ஒரு இளைஞனின் தியாகம்                                  தவறுகள் இருப்பின்
தலைமையற்ற மக்களின் எழுச்சி                                தயவு கூர்ந்து
மாற்றம் என்ற ஒற்றைச் சொல்                                சுட்டிக்காட்டவும்.
புரட்சி என்ற ஒற்றை ஆயுதம்
ஆட்டம் காணும் வல்லாதிக்கம்,
புலம் பெயரும் அடக்குமுறை
புதியதோர் சமுதாயம்..!!

உன்மையான சுதந்திரம் என்பது போராடிப் பெறுவது என்னும் தலைவர்களின் கூற்று கண்முன்னே அறங்கேறிக் கொண்டிருக்கிறது.

2011 தொடக்கம் முதல் பற்றி எரிந்து கொண்டிருக்கும் துனிசியா, எகிப்து, லிபியா, அல்சீரியா, பக்ரைன், ஓமன், ஏமன், உக்ரைன் மக்கள் காலையில் கூடி மாலையில் கலைந்துவிடவில்லை, கடமைக்காக முழக்கமிடவில்லை, சொந்த ஆதாயம் தேடி சொல்லாடல் இல்லை, உணர்ச்சிக் குவியலில் குளிர்காயவில்லை.... நாட்டின் தேவைக்காக, தன் எதிர்கால தலைமுறையின் தேவைக்காக, வறுமையை எரிப்பதற்க்காக, சுதந்திர காற்றை சுவாசிக்க, பிறந்த குழந்தை முதல் இறக்கும் மூதாட்டி வரை களம்கான்கிறார்கள்

வரலாற்று பதிவுகள் பிரெஞ்சு புரட்சி முதல் சிப்பாய் புரட்சி வரை விவரித்தாலும், ஒரு எழுத்தாக்கம் கொண்ட கட்டுரைகளாக மனனம் மட்டுமே செய்ய தெரிந்த நமக்கு சமகால மத்திய கிழக்காசிய நாடுகளில் நடக்கும் புரட்சி, அடிமைத்தனத்தை எதிர்க்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மிகப்பெரியதோர் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை

புணரத் துடிக்கும் ஏகாதிபத்தியம் ஒருபுறம், கண்கட்டி கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க பழகிய ஐக்கிய நாடுகள் சபை ஒருபுறம், மறுகாலனி ஆதிக்கத்திற்க்கு வழிவகுக்கும் ஐரோப்பிய (நிறுவனங்களின்) ஒன்றியம் ஒருபுறம், மற்றொரு இராசபக்சேவாக உருவாகி நிற்க்கும் லிபியாவின் கடாபி போன்ற சர்வாதிகாரிகள் ஒருபுறம், மாற்றத்தை விரும்பி மரண வாயிலில் நிற்க்கும் சாமான்ய மக்கள் மறுபுறம்.. இவர்களின் நடுவே பிறந்ததை தவிர வேறொன்றும் செய்யதிடாத இது போன்ற குழந்தை எரியுண்டதைப் பார்க்கும் போது, உடன் பற்றி எரிகின்றது நம் நெஞ்சமும். அடக்குமுறைகளின் ஆணிவேரைத் தேடி அறுத்தெரிய புறப்படத் துணிகின்றது அடங்கமறுக்கும் மனம்.


பிறந்தால் தமிழ் பேசும் என்று எத்தனை பச்சிளம் குழந்தைகள், இந்திய ராடார் காட்டிய பாதையில் பயணித்த சிங்களக் காடையர்களின் குண்டுகளில் தாயின் கருவறையிலேயே இதுபோன்று சிதைக்கப் பட்டிருப்பார்களோ என நினைக்கையில் இயலாமையின் உச்சத்தில் இடியென நெஞ்சம் சிதறுகிறது.

சமகால நடைமுறைகளைப் பார்க்கையில் ஒன்று மட்டும் தெளிவாகின்றது,

புரட்சிக்கு கொடுக்கும் உயிர் அரிது,
அதற்க்கு அந்த புரட்சி கொடுக்கும் விலை பெரிது

இதை பாரதிதாசன் மிக எளிய தமிழில் விட்டுச் சென்றார்..



  • ஆட்சி மாற்றம் நிகழ்ந்து 60 ஆண்டுகளுக்கு மேல்,
  • மாறி மாறி ஆளும் திராவிடக் கட்சிகள்
  • துரோகம் செய்து பழகிப்போன தேசியக் கட்சி
  • தொலை நோக்கு சிந்தனையற்ற அரசின் திட்டங்கள்
  • முடங்கிக் கொண்டிருக்கும் சிறுதொழில்கள்
  • தன்நிறைவற்ற உற்பத்தி
  • பன்னாட்டு நிறுவனங்களின் சந்தைகளாக பார்க்கப்படும் மக்கள்.
  • அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் என்னற்ற கிராமங்கள்.
இன்னும் பல...... இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.!
இதை மறுப்போர் யாரேனும் உண்டா..??  

அரிதார அழகிகள், கலைக் கூத்தாடிகளின் கேளிக்கைகளில் மயங்கி, அரசியல்வாதிகளின் வாய் பார்த்து வாழப்பழகிய கூட்டமாகிப் போன தமிழகத்தில் புரட்சியும் புரோட்டாவும் ஒரே விலையா..?? எனக்கூட கேட்க்கும் தலைமுறை உருவாகிவிடுமோ என எண்ணங்கள் எழுவதிலும் ஐயமில்லை
 
அரசியல் மேடைகள் தோறும் பதாகைகளில் படமாகிப் போன தமிழக தியாக மறவர், தமிழர்களை அறிவாயுதம் ஏந்தச் சொல்லி உயிராயுதம் ஏந்தியதும் ஒரு தீக்குச்சி..

துனிசிய நாட்டின் ஆட்சி அதிகாரத்தியே புரட்டிப்போட்டு இன்று மத்திய கிழக்கு நாடுகள் முழுதும் பரவிக்கிடக்கும் புரட்சியும் ஒரு தீக்குச்சி..   

அடுத்தகட்ட மாற்றம் அவரவர் கைகளில்.!!

வாழிய தாய் தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா