Sunday, January 23, 2011

இந்திய இறையான்மையும் வெங்காயமும்…!!
இதோ மீண்டும் ஒரு 5 இலட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டுவிட்டது. இறந்த எம் மீனவனின் சடலத்தை அடக்கம் செய்வதற்க்குள் காசோலையுடன் அரசு ஆட்சியாளர்கள் வீட்டுவாசலில் வந்து நிற்க்கின்றனர், அவர்கள் முன்னரே அறிந்திருப்பர் இன்று ஒரு தமிழன் விட்டில் இழவு இலங்கை காடையர்களால் உண்டு என்று. 

தெற்க்கே அறிக்கை நாயகம் முடிந்துவிட்டது, வடக்கே ஆரிய நாயகம் உறங்கிவிட்டது, ஒருவேளை உணவுக்கும், வாழ்வாதாரத்திற்க்கும் போராடும் அடித்தட்டு வர்க்கம் மட்டும் கேட்க்க நாதியற்ற அனாதைப் பிணங்களாய் கரையோரம் ஒதுங்கி அரசின் இறப்புப் பதிவேடுகளை நிரப்பிக் கொண்டிருக்கின்றது. 

கோடி கோடியாய் கொள்ளையடித்து தன் பிள்ளைகளை வெளிநாடுகளில் படிக்கவைத்து தன் சொத்துக்களை பாதுகாப்பாக வைக்கும் வர்க்கத்தினருக்கு நாட்டின் தென்கோடியில் ஒரு வர்க்கம் அழிக்கப் படுவது பற்றி என்ன கவலை..? பணத்தை வைத்து அரசியல் நடத்தும் ஒரு கூட்டம், செத்த பிணத்தை வைத்து அரசியல் நடத்தும் ஒரு கூட்டம். 

உறங்கிக் கொண்டிருக்கும் எம் மீனவனின் ஆறுமாதக் குழந்தை கண்விழித்து அப்பன் எங்கே என்று கேட்டால் தலைவிரி கோலத்துடன் ஓலமிடும் தாயவள் என்ன சொல்வாள்…?? 

ஒரு நாட்டின் குடிமக்கள் தொடர்ச்சியாக அண்டை நாடுகளால் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டும், அதை தட்டிக் கேட்க்க வக்கற்ற அரசு உலகத்திலேயே இந்தியாவாகத்தான் இருக்கும். அதை ஆதரிக்கும் கையாலாகாத அரசு இந்தியாவிலேயே தமிழக அரசாகத்தான் இருக்கும்.  
   
539வது மீனவன் இறந்தும் குறைந்தபட்சம் எதிர்ப்பைக் கூட தெரிவிக்காத மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டால்….!! அப்..பப்..ப்பா.. இந்தியன் என்று சொல்லும்போது புல்லரிக்கின்றது. 

ஆதிக்க வர்க்க அடிவருடிகளின் ஊடகங்களில் இந்தியா முன்னேறுகின்றது, இந்தியா வல்லரசு ஆகின்றது, அதினநவீன போர்கருவிகள் வாங்க அந்த நாட்டுடன் ஒப்பந்தம், இராணுவ தளவாடங்கள் வாங்க இந்த நாட்டுடன் ஒப்பந்தம், இராணுவத்தை பலப்படுத்த அண்டை நாடுகளுடன் கூட்டுப் பயிற்ச்சி. இத்தகைய செய்திகளை தினம் தினம் படித்து எவனாவது இந்திய ஆட்சியாளர்களைப் பற்றியோ, இந்தியா அண்டை நாடுகளுடன் கடைபிடிக்கும் கொள்கைகள் பற்றியோ பெருமை கொண்டிருந்தால், அதே செய்தித்தாளின் ஏதாவது ஒரு மூளையில் இன்றும் ஒரு மீனவன் படுகொலை என துண்டுச் செய்தியாகவோ அல்லது அதுவும் இல்லாமலோ இருக்கலாம். 

ஆனால் ஒன்று மட்டும் நிதர்சனமாகின்றது ஒரு ஆண்மைத்தன்மை அற்ற அரசுகளின் கீழ்தான் நாம் குடிமக்களாய் வாழ்கின்றோம், இந்தியாவில் ஆட்சி மாற்றம்(சுதந்திரம்) ஏற்ப்பட்டது முதல் இன்றுவரை.

குறைந்தபட்ச மனிதநேயமும் அற்ற காடையர்களால் உச்சபட்ச கொடூரங்களுக்கு உள்ளாகி இறந்துபோன எம் மீனவர்களின் மரண ஓலங்கள் மட்டும் வங்கக்கடலின் ஓரம் ஆர்பரித்து அலைகின்றன இந்திய அரசின் இயலாமையால். 

இதே நிலைமை நீடித்தால் தமிழர்களை காக்கவேண்டிய இந்திய அரசு போய்... தமிழர்களைக் காக்க தமிழக அரசு உருவாக வேண்டிய நிலைமை வரலாம்.  

காலை செய்தியை படித்தவுடன் இறுக்கமான மனம், நேரம் ஆக ஆக கோபமாய் உறுவெடுத்து சற்று நேரத்தில் குறைந்துவிடும் என பார்த்தால் இந்த நிமிடம்வரை குறையாமல் உறக்கம் தொலைக்க வைக்கின்றன. 

இயலாமையின் பிடியிலிருந்து மீளத் துடிக்கும் ஒரு தமிழன்.

வாழிய தாய்தமிழ்.
செகதேசுவரன்.இரா