Friday, October 22, 2010

புல்வெளி சொல்லிய பாடம்.



நாளைய ஏக்கம் இல்லை;
நேற்றைய தாக்கம் இல்லை;
நிதர்சன நிமிடங்களுடன்,
நிலையற்ற புல்வெளி...!!

காற்றுடன் காதல் இல்லை;
அதை எதிர்த்து வாழ்வுமில்லை;
அசைந்தே அகம் மகிழும்,
அழகான புல்வெளி...!!

மிதித்து நடந்தேன் காயமில்லை;
வெட்டி எறிந்தேன் கோபமில்லை;
என் கண்ணீரை மட்டும்
தாங்கிப் பிடித்து,
கருணை காட்டிய புல்வெளி...!!

ஒற்றை அனாதைக்கு
ஒரு கோடி சொந்தமென,
சில நிமிடங்கள் உறவாடிய;
பாசப் பச்சைப் புல்வெளி...!!

கிடைக்கும் தோல்விகள்
வரம் என்று,
மிதித்ததும் துடித்தெழுந்த;
துவண்டுபோகாப் புல்வெளி...!!

பாவப் பட்ட மனிதன் நடந்த
ஒற்றையடிப் பாதையில் மட்டும்,
முளைக்காமல் முறைத்துக்கொண்ட
தன்மானப் புல்வெளி...!!









வாழிய தாய் தமிழ்
அன்புடன் 
ஜெகதீஸ்வரன்.இரா
 

Thursday, October 21, 2010

அங்கலாய்த்துக் கொண்ட மைனாக்கள்

















அகண்ட சாலைகள்
அனல்பறக்கும் வாகனங்கள்

அவசரப் பயணம்...

அலறியடித்து ஓடும்
மனிதக் கூட்டம்,


சிவப்பில்
ஒரு கூட்டம் அடைபட,
பச்சையை நோக்கி
பாயும் ஒரு கூட்டம்


ஒருவன் தவறினால்
இன்னொருவன் தாறுமாறாய்;

இதில் காதைக் கிழிக்கிற
சத்தம் வேறு...


எதைத் தேடி இவர்கள் ஓட்டம்;
எதற்க்காக இந்த அவசரம்;
என அங்கலாய்த்துக் கொண்டன..
அந்த சிக்னல் கம்பத்தில்
அமர்ந்திருந்த மைனாக்கள்..!! 



ஏன் மனித மனம் பொருள் தேடலிலேயே
வெந்து சாக வரம் பெற்றது...??


 

வாழிய தாய்த் தமிழ்
அன்புடன்
ஜெகதீஸ்வரன்,இரா
 

Saturday, October 16, 2010

தனிமை..

















நிதர்சனம் புரிந்து
மாறிய அவள் வழி..
நீங்கா
தனிமையினூடே
நீளும் என்வழி..

சிந்திக்க வைத்த
தனிமை
வரமாய் நிற்க்க,
சிதறடித்த
தனிமை சாபமிட..

இலக்கென
அவளைத் தேடித்
தொலைந்தது,
இலக்கணப்
பிழையாய் போன
வாழ்வு...

விளக்கென
வெளிச்சம் தந்து
அவள்
விழுங்கிச் சென்ற
இரவுகள் இன்று
இரவல்களாய்...!!

பாசத்துடன்
பாதங்கள் முத்தமிட்ட
தாய்மண் தொலைத்து,

பாவங்கள் முற்றுகையில்
பாலைமண் நுழைந்து,

என்னுள் வாழ்ந்திடும்
என்னவள்
நினைவுகளால்,
எத்தனை இரவுகள்
இப்படி நீளுமோ....??



வாழிய தாய்த் தமிழ்

அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா

Monday, October 11, 2010

திசையறியா வாழ்வோ தனிமைக் கடல்...!!!

திசையறியா காதல் கடல்
சிரித்தே சிதைத்த மௌனப்புயல்
ஆர்பரித்தே அலையும் மனதின் சுழல்
அதனிடம் அடிமையாய் கரையின் குறை
உள்ளத்தே உறையும் கண்ணீர் நுரை....

பற்றி எரியும் இதயப் பிணம்
இன்னும் விரியும் சிந்தனை தினம்
சுவடெனப் பதிந்த நினைவுகள் வரம்
தொலைத்தே தாழ்ந்த துயருடன் சிரம்...

காற்றில் தேடிய கவிதையின் முகம்
வரைந்தே உறைந்த களைப்பில் அகம்
அவளுக்காய் தொலைத்த அவளின் நிழல்
திக்கற்ற வாழ்வென விரியும் கடல்...

திசையறியா வாழ்வோ தனிமைக் கடல்...!!! 






வாழிய தாய்த் தமிழ்
அன்புடன்
ஜெகதீஸ்வரன். இரா
 

Thursday, October 7, 2010

ஏன் இந்தப் பிறவி...!!

பிரபஞ்ச வெடிப்பில்
எரியும் நெருப்பில்
பூகோளப் பிறவி...

 
ஒற்றைத் துளியில்
ஆயிரக் கொலைப் பின்
உயிரணுப் பிறவி...


மரணக் கிடப்பில்
மயங்கிய தாயவள்
மடியினில் பிறவி...



அங்கக் களிப்பில்
பேதை அணைப்பில்
அடுத்தொரு பிறவி...



நிம்மதி தொலைப்பில்
பொருள் பல தேடி
நித்தமும் பிறவி...



இதயத் துடிப்பில்
சிந்தனைத் தெறிப்பில்
எழுத்துப் பிறவி...

  
எட்டுக் கால் நடையில்
எங்கோ பயணம்
ஏன் இந்தப் பிறவி...!!
 
 
 
அன்புடன்
 
ஜெகதீஸ்வரன். இரா