Tuesday, May 24, 2011

ஊடகங்களின் ரஜினி வியாபாரம்.


ஒரு காலத்தில் நாட்டு மக்களின் விழிப்புணர்வுக்காகவும், மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவும், நாட்டுப்பற்றை வளர்க்கவும் ஆரம்பிக்கப்பட்ட ஊடகங்கள் தங்களின் பணியை செவ்வனே செய்துவந்தன, மக்களின் அறியாமையை போக்கும் பணிகளில் ஊடகங்களின் பங்கு இன்றியமையாத ஒன்று என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு அவர்களை மூடர்களாக்கும் பணிகளை அசராமல் செய்கின்றன என்பதும் உண்மை.

இதோ இன்றைய வணிகமயமான உலகில் தங்களின் வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள எத்தகைய வேலையையும் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்பது சமகால நிகழ்வுகளை காணும்போது நிதர்சனமாகிறது.

A/c அறையில் படுத்துறங்கி பந்தாவாக வந்து செல்லும் அரசியல் கட்சி தலைவர்கள் முதல், அன்றாடம் கூலிவேலை செய்து பிழைக்கும் கடைநிலை உழைப்பாளி வரை தமிழகமே நடிகர் ரஜினியின் உடைநிலையைப் பற்றித்தான் உண்ணாமல் உறங்காமல் கவலைப்படுவது போன்ற ஒரு சித்தரிப்பு.



தோழர்களே இது நடிகர் ரஜினியைப் பற்றிய பதிவல்ல அவரை வைத்து வியாபாரம் செய்து, அவரின் தனிப்பட்ட சுகாதாரப் பிரச்சினையை மிகைப்படுத்தி, அத்தியாவசியப் பிரச்சினைகளை மடைமாற்றி  மக்களை மடையர்களாக்கும் ஊடங்களுக்கான கண்டனம். இதை எழுதுவதால் நிகழ்வது ஏதுமில்லை நேர விரயத்தை தவிர.

மணிக்கு ஒருமுறை அதிரடி செய்தி, முக்கிய செய்தி, பரபரப்பு செய்தி, என கூறும்போது சரி நாட்டின் தலையாய பிரச்சினைகளையும், எதிர்கால தொலைநோக்குடன் கூடிய விவாதங்களையும், விவசாயிகள் மீதான மனித உரிமை மீறல்களையும்தான் சொல்லப் போகிறார்கள் என்றால், ரஜினி வாழைப்பழம் சாப்பிட்டார், ரஜினி பழரசம் அருந்தினார், ரஜினி IPL பார்த்தார் என்பது தான் அவர்களின் தலைப்புச் செய்தியாம். 



எந்த ஒரு உயிரும் நோய்வாய்பட்டிருக்கும் போது அதற்காக வழிபாடு செய்வது மனிதானாய் பிறந்து கடவுள் மேல் நம்பிக்கை கொண்ட மனிதநேயம் கொண்ட மனிதனின் மாண்பு. இதில் மிகைப்படுத்தவோ, ஒப்பாரிவைக்கவோ என்ன இருக்கிறது என தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். 

ஓட்டுப் பொறுக்கி அரசியலின் அடித்தளமாக கலைக்கூத்தாடிகளை சித்தரிப்பதும், அரிதார அழகிகளையும் அவர்தம் அந்தரங்கங்களையும் வைத்து வியாபாரம் செய்வதும் இந்த ஊடகங்கள்தான். இதே நிலைதான் முந்நாள் அரசு பதவியிலிருந்து போனதும், புதிய அரசு பதவியேற்றதும் தொடர்கிறது.

தற்கால சூழ்நிலையின் தகவல்கள் என கூறி மக்களை கற்காலம் நோக்கிய பாதையில் பயணிக்கவைக்கும் ஊடகங்களுக்கு என்றுதான் அறிவில் உறைக்குமோ தெரியவில்லை.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி. – குறள்.

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்க்கு அழகாகும். 


வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா