Monday, July 11, 2011

கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் மனித குலத்தின் பேரழிவு.

உள்நாட்டுப் போர், சரியான மழையில்லை, எங்கும் வறட்சி, இறைவனின் படைப்பில் பிறந்த குழந்தை தாய்ப்பாலின்றி, சரியான ஊட்டமிக்க உணவுகளின்றி, குடிக்க தண்ணீர் இன்றி, எழும்புகள் புடைத்து தோல்கள் சுருங்கி உறிந்து கீழே விழுந்து, ஏன் சாகிறோம் என்று அறியாமல் மண்ணோடு மண்ணாக புதையும் அவலம்.  சோமாலியா, எத்தியோப்பியா, மற்றும் கென்யாவின் வடக்குப் பகுதிகள் மிகக் கடுமையான வறட்சி, அத்தியாவசியப் பொருட்களின் உச்சபட்ச விலையேற்றம் மற்றும் உள்நாட்டுப் போர்களால் சிக்குண்டுள்ள வடகிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் தற்போதைய நிலை மனிதநேயத்தை மதிக்கும் ஒவ்வொரு மனிதனின் நெஞ்சையும் உறையச் செய்யும். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கொடிய மனித குலப் பேரழிவு. கடந்த காலங்களில் வறட்சியும் பட்டினிச் சாவுகளும் இருந்தாலும் அறிவியல் மற்றும் விஞ்ஞானம் எட்டுக்கால் பாய்ச்சலில் செல்லும் சமகாலத்திலும், இதே நிலை தொடர்வது மனிதன் கண்ட விஞ்ஞானம் மற்றும் அறிவியலின் இயலாமையின் உச்சமா அல்லது உலகின் பாராமுகம் மற்றும் சுயநலப் போக்கின் உச்சமா..? உணவு மற்றும் தண்ணீர் தேடி வாரக்கணக்கில் அலைந்து திரிந்து பல மைல் தூரம் நடந்து, டடாப் (Dadaab) என்னும் இம்முன்று நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் நோக்கி படையெடுத்து வரும் மக்கள், இறுதியாக அகதிகள் முகாம் வந்து சேரும்முன் உடன் வந்த குழந்தைகள் பிணமாகிப் போகின்றன என தாயவள் அழுகிறாள். அவளின் கண்ணீரும் இமைகளைத் தாண்டும்முன் வெப்பத்தில் உறைந்து போகின்றது. களைப்பு மறந்து புகழிடம் கிடைத்த மகிழ்ச்சியில் முகாம் நோக்கி விரைய  வாசலிலேயே தடுக்கப்பட்டு பதிவு செய்வதற்க்காக நாள்கணக்கில் காத்துகிடக்க வேண்டிய கொடுமை. நம்மை உறக்கம் தொலைக்க வைத்த பல இரவுகளின் தொடர்ச்சி.        

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி இன்றைய நாள்வரை. 
  • கிட்டத்தட்ட 1 கோடி மக்கள் கடுமையான வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தினமும் சுமார் 1500 பேர் வரையிலான மக்கள் முகாம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
  • 90,000 பேருக்காக ஏற்படுத்தப்பட்ட Dadaab அகதிகள் முகாமில் பாதிக்கப்பட்டோரின் வருகை மிக விரைவில் 500,000த்தை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.    
உலகநாடுகள் தங்கள் ஆயுதம் வாங்கும், கேளிக்கைக்கான, ஆடம்பரத்திற்க்கான செலவில் ஒரு சதவிகிதம் கொடுத்தாலே அழிவின் விழிம்பில் வாழ்வோரின் வாழ்நாள் நீட்டிக்கப்படும். ஏனோ இந்த ஏற்றத்தாழ்வுகள்.? தோழர்களே, இதற்கு நம்மால் என்ன செய்துவிட முடியும் என நினைக்கிறீர்களா? இதோ ஐக்கிய நாடுகள் சபையின் இணையத்தில் நீங்கள் என்ன செய்ய முடியும் என விவரித்துள்ளனர். முடிந்தவரை நம்மால் இயன்றதை செய்வோம், அறிந்தோர் அனைவரிடமும் இவ்விடயத்தை எடுத்துச் செல்வோம்.


நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. - குறள்

பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்கு கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

வாழிய தாய்தமிழ்
அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா

No comments:

Post a Comment