Sunday, March 20, 2011

ஏகாதிபத்திய கழுகும், மறுகாலனியாதிக்க காக்கைகளும்.


ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.                                            - திருவள்ளுவர்

ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் இதோ கண்முன்னே கழுகும் காக்கையும் கூத்தாடிக் கொண்டிருக்கின்றன லிபிய நாட்டின் மீது. 

உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் தற்போதைய நிலவரம் லிபியாவில் நடக்கும் உள்நாட்டுக் கிளர்ச்சியும், தன் மக்களையே கொல்லும் அதிபர் கடாபியும் அவருக்கு எதிரான கிளர்ச்சியாளர்களும். இவர்களின் நடுவே புகுந்து ஐக்கிய நாடுகள் சபைகள் மற்றும் அரபுநாடுகள் கூட்டமைப்பு நாடுகளும் ஒப்புதல் செய்துவிட்டன என போர்தொடுக்க முயலும் உலக வல்லாதிக்கங்களான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, நெதர்லாந்து, இத்தாலி, மற்றும் பல நாடுகள் தான்.  


சமகாலத்தில் ஏமன் நாட்டிலும் மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள், பக்ரைன் நாட்டிலும் மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள் நிராயுதபானியாய் நிற்க்கும் தன்நாட்டின் மக்கள் மீதே சொந்த இராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்யும் வேளையில் அதை தட்டிக் கேட்காத மேற்கத்திய வல்லாதிக்கம், ஆயுத்துடன் போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக லிபிய நாட்டு இராணுவத்தை எதிர்த்து நேரடித் தாக்குதல் நடத்தும் மர்மம் என்ன.? 

ஏமன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கப்போவது இல்லை, பக்ரைனில் தாக்ககுதல் நடத்தத் தேவையில்லை ஏனென்றால் அந்நாட்டு மன்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளில் ஒருவர், மேலும் அடிவருடிகளின் அங்கங்களான சவுதி, கத்தர், நாடுகளின் படைகள் பக்ரைனில் முகாமிட்டுள்ளன. இந்த லிபியா மீது தாக்குதல் நடத்தினால் அவர்களின் ஒட்டுமொத்த என்னை வளத்தை உறிஞ்சிக் கொள்ளலாம் என்ற எண்ணமாக கூட இருக்கலாம். 


அதனால் தான் நேற்று இரவுமட்டும் NATO படைகள் 100க்கும் மேற்பட்ட ஏவுகனைகள் பல்வேறு முனைகளிலிருந்தும் ஏவப்பட்டிருக்கின்றன. இதில் 50 சதவிகிதம் மக்களை கொல்லும் லிபிய இராணுவத்தை தாக்கியிருக்கலாம் என வைத்துக் கொள்வோம் மீதமுள்ள 50 சதவிகிதம் எத்தனை அப்பாவி மக்களின் உயிரை பலி கொண்டிருக்குமோ என நினைக்கையில் இரவில் உறக்கம் தொலைகிறது. அந்நாட்டு மக்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும் இவ்வளவு உயிரிழப்பு ஏற்படாது, இந்த கழுகிடமும் காக்கைகளிடமும் கொத்துபட்டே அந்நாட்டு மக்கள் சாகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  

இதைவிட 200 மடங்கு மக்கள் இலங்கை இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்படுகையில் இதே வல்லாதிக்கம் வேடிக்கைதான் பார்த்தது. அன்று மக்கள் கொல்லப்படவில்லையா..?? அல்லது உள்நாட்டிலேயே அகதிகளாக்கப் படவில்லையா..?? ஆயுதம் தாங்கிய மக்கள் ஆதரவு குழுக்கள்தான் இல்லையா..?? ஏன் இந்த ஏகாதிபத்திய, மறுகாலனியாதிக்க வெறி..?? 

கேள்விகள் குவியக் குவிய
அதனூடே புதைந்து போகிறோம்..!!
வேள்விகள் வளர்த்து வளர்த்து
வெற்றி விடியலின்றி உறைந்துபோகிறோம்..!!        

இவர்களுக்கு சாவுமனி அடிக்க மட்டுமே இந்த இயற்கை தன் கோபக் கணைகளை கொட்டுகின்றதோ..??

மனித உரிமைகளை மீறுகிறார் என லிபிய அதிபர் மீது குற்றம் சுமத்தும் வல்லாதிக்கங்கள், தங்களின் தாக்குதல் மட்டும் மனித உரிமைகளை மீறாதென்பது எந்த மனித உரிமை சட்டமோ..??

எல்லாம் இந்த ஒட்டு மொத்த பேரண்டத்தையும் படைத்து காப்பவனுக்கே வெளிச்சம். வேண்டிக் கொள்வோம் லிபிய நாட்டின் அப்பாவி மக்களுக்காக.

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.                                            - திருவள்ளுவர்

தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.

வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா

1 comment:

  1. லிபிய நாட்டின் அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...

    ReplyDelete