Thursday, June 23, 2011

என்ன செய்தோம்..!!


அண்டிப் பிழைப்பதில்லை
நமது நிலை,
மண்டியிட்டு மாள்வதில்லை
தமிழர் தலை;

ஏக்காளமிடும் எதிரிகள் கூட்டம்,
துகிலுரிக்கும் துரோகிகள் கூட்டம்;

தலைவிரிக் கோலமாய்
தாயவள்,
கதறல் சத்தம் தெருவெங்கும்...
தாயின் பிணமருகே..
தாய்ப்பாலுக்காய்
குழந்தைகளின் அலறல் சத்தம்..!!

வடநட்டான் என்செய்வான்
வாய்க்கரிசி இயைதனையே..
தென்னாட்டான் சிதைமூட்டி
கூட்டுக் கொள்ளி பொருத்தியனே..!!

தாய் தமிழினம் சிதறிடுமே
தரிகேட்ட தலைவர்களால்...
எழுந்திடடா என் தோழா
இலக்கென்ன தெரிந்ததடா…!!!

புரட்சியின் வாளெடு
பணப் பேய்கள் ஓட்டவே..
புரட்சியில் தோள்கொடு 
புது வலிமை காட்டவே..!!

Tuesday, May 24, 2011

ஊடகங்களின் ரஜினி வியாபாரம்.


ஒரு காலத்தில் நாட்டு மக்களின் விழிப்புணர்வுக்காகவும், மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவும், நாட்டுப்பற்றை வளர்க்கவும் ஆரம்பிக்கப்பட்ட ஊடகங்கள் தங்களின் பணியை செவ்வனே செய்துவந்தன, மக்களின் அறியாமையை போக்கும் பணிகளில் ஊடகங்களின் பங்கு இன்றியமையாத ஒன்று என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு அவர்களை மூடர்களாக்கும் பணிகளை அசராமல் செய்கின்றன என்பதும் உண்மை.

இதோ இன்றைய வணிகமயமான உலகில் தங்களின் வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள எத்தகைய வேலையையும் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்பது சமகால நிகழ்வுகளை காணும்போது நிதர்சனமாகிறது.

A/c அறையில் படுத்துறங்கி பந்தாவாக வந்து செல்லும் அரசியல் கட்சி தலைவர்கள் முதல், அன்றாடம் கூலிவேலை செய்து பிழைக்கும் கடைநிலை உழைப்பாளி வரை தமிழகமே நடிகர் ரஜினியின் உடைநிலையைப் பற்றித்தான் உண்ணாமல் உறங்காமல் கவலைப்படுவது போன்ற ஒரு சித்தரிப்பு.



தோழர்களே இது நடிகர் ரஜினியைப் பற்றிய பதிவல்ல அவரை வைத்து வியாபாரம் செய்து, அவரின் தனிப்பட்ட சுகாதாரப் பிரச்சினையை மிகைப்படுத்தி, அத்தியாவசியப் பிரச்சினைகளை மடைமாற்றி  மக்களை மடையர்களாக்கும் ஊடங்களுக்கான கண்டனம். இதை எழுதுவதால் நிகழ்வது ஏதுமில்லை நேர விரயத்தை தவிர.

மணிக்கு ஒருமுறை அதிரடி செய்தி, முக்கிய செய்தி, பரபரப்பு செய்தி, என கூறும்போது சரி நாட்டின் தலையாய பிரச்சினைகளையும், எதிர்கால தொலைநோக்குடன் கூடிய விவாதங்களையும், விவசாயிகள் மீதான மனித உரிமை மீறல்களையும்தான் சொல்லப் போகிறார்கள் என்றால், ரஜினி வாழைப்பழம் சாப்பிட்டார், ரஜினி பழரசம் அருந்தினார், ரஜினி IPL பார்த்தார் என்பது தான் அவர்களின் தலைப்புச் செய்தியாம். 



எந்த ஒரு உயிரும் நோய்வாய்பட்டிருக்கும் போது அதற்காக வழிபாடு செய்வது மனிதானாய் பிறந்து கடவுள் மேல் நம்பிக்கை கொண்ட மனிதநேயம் கொண்ட மனிதனின் மாண்பு. இதில் மிகைப்படுத்தவோ, ஒப்பாரிவைக்கவோ என்ன இருக்கிறது என தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். 

ஓட்டுப் பொறுக்கி அரசியலின் அடித்தளமாக கலைக்கூத்தாடிகளை சித்தரிப்பதும், அரிதார அழகிகளையும் அவர்தம் அந்தரங்கங்களையும் வைத்து வியாபாரம் செய்வதும் இந்த ஊடகங்கள்தான். இதே நிலைதான் முந்நாள் அரசு பதவியிலிருந்து போனதும், புதிய அரசு பதவியேற்றதும் தொடர்கிறது.

தற்கால சூழ்நிலையின் தகவல்கள் என கூறி மக்களை கற்காலம் நோக்கிய பாதையில் பயணிக்கவைக்கும் ஊடகங்களுக்கு என்றுதான் அறிவில் உறைக்குமோ தெரியவில்லை.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி. – குறள்.

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்க்கு அழகாகும். 


வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா

Monday, April 25, 2011

ஐக்கிய நாடுகள் சபை இலங்கையின் போர்குற்ற அறிக்கை வெளியீடு.

தோழர்களே...

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்குற்றம், தொடர்பான விசாரனை அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.


அடுத்தகட்ட முன்னெடுப்பிற்க்கு ஆயத்தமாவோம், கந்தக குண்டுகளில் கருகி செத்த பச்சிளம் குழந்தைகளின் ஓலக்குரலின் பதிலைக் கேட்டு..

வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா






Saturday, April 16, 2011

தேர்தல் வாக்கு வர்த்தகத்தின் ஒரு வெளிப்பாடு, இதில் உங்களின் நிலைப்பாடு…??

2011 சட்டமன்ற தேர்தல்: தமிழ்நாடு

அரசியல் பங்கு வர்த்தகம்,
உச்சபட்ச விளம்பரம்
ஆட்சியை பிடிப்பதற்க்கான தேர்தல் அறிக்கை
சாதிய & மதப் பற்று
குறைகூறி தான் சிறந்தவன் என மெய்ப்பித்தல்
தனி மனிதப் பகையின் வெளிப்பாடு
சிறந்த தலைமை நாங்கள் இல்லை என ஒப்புதல்
உங்களை விட்டால் வேறு யாருமல்ல என மக்களின் ஒப்புதல்.

இவை எல்லாம் சேர்ந்ததுதான் 2011 சட்டமற்ற தேர்தல். இதில் யாருக்கேனும் மறுப்பு உண்டா..??

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 60 ஆண்டுகள் அரைகுறை உடையுடன் அலையும் உழைக்கும் வர்க்கம். உற்பத்திக்கான சரியான கொள்முதல் விலையின்றி அழிவின் விழிம்பில் விவசாயம் ஒருபுறம், அதே பொருட்களின் உச்சபட்ச விலையேற்றத்தில் தவிக்கும் மக்கள் ஒருபுறம். வாழ்க அரசியல்.

சாதிக்கு ஒரு கட்சி, சாதியை ஒழிக்க ஒரு கட்சி, சாதிய கூட்டணியுடன் அரசியல் தலைமை, அமோக ஆதரவு தரும் மக்கள். தேர்தல் அறிக்கை வெளியீடு சாதியை ஒழிக்க பாடுபடுவோம். பாடுபட்டு.. பாடுபட்டு.. இருக்கும் சாதியை விட, சாதி கட்சிகள்தான் அதிகம். சாதி என்னும் கதவுகள் பூட்டபட்டிருக்கும் நமது வீட்டைத் திறந்து வெளியேறாமல் எப்படி இருளில் மூழ்கிக் கிடக்கும் ஊருக்கு வெளிச்சம் கொடுக்கப்போகிறோம் எனும் சிந்தனையற்ற மக்கள் கூட்டம், வாழ்க அரசியல்.  

மிக நேர்த்தியான காணொளிக் கோணங்கள், அழகான காட்சியமைப்புகள், சீரிய சிந்தனையை தெளிக்கும் கருத்துக்களத்துடன் வகை வகையாய் விளம்பரங்கள் கடந்த ஒருமாதம் மக்களை வதைத்து எடுத்திருக்கும் சொந்த ஆதாயத்திற்க்கான தேர்தல் பரப்புரையின் புதிய வடிவமாய் காணொளிப் பரப்புரை. 2001ல் அவர்களிடம் இருந்த கருத்துக்களம் 2006ல் இவர்களிடம், மீண்டும் 2011ல் அவர்களிடம். இடமாற்றமே தவிர எதுவும் மாறவில்லை வாழ்க அரசியல்.
                 
கலைக் கூத்தாடிகளின் கூடுகையாகிப்போன பிரச்சார மேடைகள், என்னற்ற தலைவர்கள் கொள்கைகளை சீர்தூக்கி வளர்ந்த இயக்கங்கள் கலைக் கூத்தாடிகளின் கவர்சிகளுக்குள்ளும், விளம்பர விற்பனைக்குள்ளும் முடங்கிப்போன வேதனை. நீக்கமற நிறைந்திருக்கும் தலைமையின் வெற்றிடத்தை ஆதாய அரிதாரிகளிடம் தேடும் மனநிலையில் மக்கள், வாழ்க அரசியல்.

பழம்பெருமை பேசி நிகழ்காலத்தில் நிலைநிற்கத் தவறிய தமிழிய இயக்கங்கள். அதனூடே சவாரி செய்யும் அரசியல் கட்சிகள், பேச்சுப் போதை, இலவசப் போதை, அறியாமை போதை, ஆணவப் போதை, விளம்பரப் போதை, திரைத் துறைப் போதை, இன்னும் புதிய வடிவங்களில் வாழ்க அரசியல்.

செந்நீர் சிந்தி வாங்கிய ஆட்சி மாற்றம்,
கயவர் தம் கைகளில் சிக்கி நாற்றம்..

தமிழகத்தின் நிலையை என்னி நித்தம் தவிக்கும் ஒட்டுமொத்த இளைஞர்களில் ஒருவன்.

வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வர.இரா

Sunday, April 10, 2011

நவீன தொழில்நுட்பத்தில் நாதியற்று நாம்…!!

கடிதத்திற்க்காய் காத்திருந்து
எதிர்பார்ப்புகளில் ஏங்கித்தவித்த
தருணங்கள் மறந்து,
வந்து விழுகிறது
வார்த்தைகளற்ற
மின்னஞ்சல்

முத்தங்கள் அனைத்தும்
சத்தங்களாய்
பறிமாறிக் கொள்கின்றன,
கம்பி வழி தொலைபேசியினூடே...

பெற்ற குழந்தையை
Webcam வழி காட்டி
அதன் இடத்தை ஆக்கிரமிக்கும்
மடிக்கணிணி

முகம் பார்க்க துடித்து
தூதுவிட்ட
காதலின் கண்ணீர்;
காற்றலைகளில்
கசிந்து விழுகிறது
I Miss You என்ற
குறுஞ்செய்தியாக

உணர்வுகள்
சொற்களாய் பிறந்து
செயலாய் வளரும் முன்,
செய்து முடிக்கின்றன
மின்னனு சாதனங்கள்,
என் சிந்தனையை
முடக்கி…!!

இறுக மூடிய
வீட்டின் சன்னலின் வெளியே
தென்றல் சிறைபட
சுதந்திரமாய் நான் மட்டும்,
A/C அறையெனும் உலகத்தில்,

காற்றுபுகாத காரினுள்
காதை கிழிக்கும்
பாட்டுச் சத்தம்
வீரனாய் விரைகிறேன் வேலைக்கு;
அட அடிமையே என
ஏளனம் செய்தது
அந்த சாலையோர
மலர்ச் செடி

தொழில்நுட்பங்களின்
உச்சத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இயல்பான
வாழ்க்கை தொலைத்து..!!


வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா

Monday, March 21, 2011

வெற்றிடம் நோக்கி வேகமாய் விரைகிறேன்..!!


எங்கோ பிறந்த மெளனத்தின்
இங்கே தொலைகிறேன்
விழுந்து தெரிக்கும்
கண்ணீர் துளி
தவழ்ந்து சிரிக்க;
சுற்றும் உலகச்
சுழற்ச்சியுனூடே
உயரே பறக்கிறேன்..!!

இரவல் பெற்றே
வாழத் தவித்த
இதயத் துடிப்பில்,
ஓசையற்ற ஒற்றைச் சத்தம்
உயிரைத் தீண்ட;
அதை தேடித் தவிக்கும்
இருளின் மாயையில்
தொலைந்தே போகிறேன்..!!

நினைவுகள் பிணமென எரியும்
மனதின் கல்லறையில்,
வாடித் தவிக்கும்
மெளனப் பூக்கள்
அஞ்சலி செலுத்த;
அதன் வளமை நிலைக்க
நிம்மதியற்று
நித்திரை தொலைக்கிறேன்..!!
 
உரசும் காற்றினூடே
கடைசி பிம்பம்
மெல்லமாய் மறைய;
அதன் துகள்கள்
தூக்கி வீசப்பட்ட
வெற்றிடம் நோக்கி
வேகமாய் விரைகிறேன்..!! 

விழி வழி பயணித்த
நெருப்பில்,
உருகித் தவித்த
எண்ணக் குவியல்;
இறுதி வாயிலில்
நிலைநிற்க நினைத்து
கடைசிச் சுடராய் 
கையறு நிலையில்,
அனைந்தே போகிறேன்..!!


வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா

Sunday, March 20, 2011

ஏகாதிபத்திய கழுகும், மறுகாலனியாதிக்க காக்கைகளும்.


ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.                                            - திருவள்ளுவர்

ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் இதோ கண்முன்னே கழுகும் காக்கையும் கூத்தாடிக் கொண்டிருக்கின்றன லிபிய நாட்டின் மீது. 

உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் தற்போதைய நிலவரம் லிபியாவில் நடக்கும் உள்நாட்டுக் கிளர்ச்சியும், தன் மக்களையே கொல்லும் அதிபர் கடாபியும் அவருக்கு எதிரான கிளர்ச்சியாளர்களும். இவர்களின் நடுவே புகுந்து ஐக்கிய நாடுகள் சபைகள் மற்றும் அரபுநாடுகள் கூட்டமைப்பு நாடுகளும் ஒப்புதல் செய்துவிட்டன என போர்தொடுக்க முயலும் உலக வல்லாதிக்கங்களான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, நெதர்லாந்து, இத்தாலி, மற்றும் பல நாடுகள் தான்.  


சமகாலத்தில் ஏமன் நாட்டிலும் மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள், பக்ரைன் நாட்டிலும் மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள் நிராயுதபானியாய் நிற்க்கும் தன்நாட்டின் மக்கள் மீதே சொந்த இராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்யும் வேளையில் அதை தட்டிக் கேட்காத மேற்கத்திய வல்லாதிக்கம், ஆயுத்துடன் போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக லிபிய நாட்டு இராணுவத்தை எதிர்த்து நேரடித் தாக்குதல் நடத்தும் மர்மம் என்ன.? 

ஏமன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கப்போவது இல்லை, பக்ரைனில் தாக்ககுதல் நடத்தத் தேவையில்லை ஏனென்றால் அந்நாட்டு மன்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளில் ஒருவர், மேலும் அடிவருடிகளின் அங்கங்களான சவுதி, கத்தர், நாடுகளின் படைகள் பக்ரைனில் முகாமிட்டுள்ளன. இந்த லிபியா மீது தாக்குதல் நடத்தினால் அவர்களின் ஒட்டுமொத்த என்னை வளத்தை உறிஞ்சிக் கொள்ளலாம் என்ற எண்ணமாக கூட இருக்கலாம். 


அதனால் தான் நேற்று இரவுமட்டும் NATO படைகள் 100க்கும் மேற்பட்ட ஏவுகனைகள் பல்வேறு முனைகளிலிருந்தும் ஏவப்பட்டிருக்கின்றன. இதில் 50 சதவிகிதம் மக்களை கொல்லும் லிபிய இராணுவத்தை தாக்கியிருக்கலாம் என வைத்துக் கொள்வோம் மீதமுள்ள 50 சதவிகிதம் எத்தனை அப்பாவி மக்களின் உயிரை பலி கொண்டிருக்குமோ என நினைக்கையில் இரவில் உறக்கம் தொலைகிறது. அந்நாட்டு மக்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும் இவ்வளவு உயிரிழப்பு ஏற்படாது, இந்த கழுகிடமும் காக்கைகளிடமும் கொத்துபட்டே அந்நாட்டு மக்கள் சாகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  

இதைவிட 200 மடங்கு மக்கள் இலங்கை இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்படுகையில் இதே வல்லாதிக்கம் வேடிக்கைதான் பார்த்தது. அன்று மக்கள் கொல்லப்படவில்லையா..?? அல்லது உள்நாட்டிலேயே அகதிகளாக்கப் படவில்லையா..?? ஆயுதம் தாங்கிய மக்கள் ஆதரவு குழுக்கள்தான் இல்லையா..?? ஏன் இந்த ஏகாதிபத்திய, மறுகாலனியாதிக்க வெறி..?? 

கேள்விகள் குவியக் குவிய
அதனூடே புதைந்து போகிறோம்..!!
வேள்விகள் வளர்த்து வளர்த்து
வெற்றி விடியலின்றி உறைந்துபோகிறோம்..!!        

இவர்களுக்கு சாவுமனி அடிக்க மட்டுமே இந்த இயற்கை தன் கோபக் கணைகளை கொட்டுகின்றதோ..??

மனித உரிமைகளை மீறுகிறார் என லிபிய அதிபர் மீது குற்றம் சுமத்தும் வல்லாதிக்கங்கள், தங்களின் தாக்குதல் மட்டும் மனித உரிமைகளை மீறாதென்பது எந்த மனித உரிமை சட்டமோ..??

எல்லாம் இந்த ஒட்டு மொத்த பேரண்டத்தையும் படைத்து காப்பவனுக்கே வெளிச்சம். வேண்டிக் கொள்வோம் லிபிய நாட்டின் அப்பாவி மக்களுக்காக.

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.                                            - திருவள்ளுவர்

தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.

வாழிய தாய்தமிழ்
ஜெகதீஸ்வரன்.இரா