Wednesday, July 27, 2011

ஆல்கஹால் அனுக்கள்...!!

மது அருந்தி
மதி பிறழ்ந்து,
மானம் கெட்ட
மனிதர் கூட்டம்...

விழி திறந்து
நிலை அறிந்து,
ஊனம் உற்ற
சட்ட திட்டம்...

எழும் தமிழர்
விழும் நிலையம்;
வீதி வழி
ஆட்டம் பாட்டம்...

முறுக்கேறிய
நரம்பறுத்து,
சரக்கேற்றும்
இளைஞர் கூட்டம்...
 
பிணியுடனே
பத்தினியாள்,
பிள்ளையரும்
பட்டினிப் போராட்டம்...

ஆல்கஹால்
அனுக் கசிவால்
சிந்தனையின்
சதுராட்டம்...

கண் இழந்து
குடல் அறுந்து
சாவைக் காண
தள்ளாட்டம்…!!!

***********************************************************

வாழிய தாய்தமிழ்
அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா

Monday, July 11, 2011

கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் மனித குலத்தின் பேரழிவு.

உள்நாட்டுப் போர், சரியான மழையில்லை, எங்கும் வறட்சி, இறைவனின் படைப்பில் பிறந்த குழந்தை தாய்ப்பாலின்றி, சரியான ஊட்டமிக்க உணவுகளின்றி, குடிக்க தண்ணீர் இன்றி, எழும்புகள் புடைத்து தோல்கள் சுருங்கி உறிந்து கீழே விழுந்து, ஏன் சாகிறோம் என்று அறியாமல் மண்ணோடு மண்ணாக புதையும் அவலம்.  



சோமாலியா, எத்தியோப்பியா, மற்றும் கென்யாவின் வடக்குப் பகுதிகள் மிகக் கடுமையான வறட்சி, அத்தியாவசியப் பொருட்களின் உச்சபட்ச விலையேற்றம் மற்றும் உள்நாட்டுப் போர்களால் சிக்குண்டுள்ள வடகிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் தற்போதைய நிலை மனிதநேயத்தை மதிக்கும் ஒவ்வொரு மனிதனின் நெஞ்சையும் உறையச் செய்யும். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கொடிய மனித குலப் பேரழிவு. கடந்த காலங்களில் வறட்சியும் பட்டினிச் சாவுகளும் இருந்தாலும் அறிவியல் மற்றும் விஞ்ஞானம் எட்டுக்கால் பாய்ச்சலில் செல்லும் சமகாலத்திலும், இதே நிலை தொடர்வது மனிதன் கண்ட விஞ்ஞானம் மற்றும் அறிவியலின் இயலாமையின் உச்சமா அல்லது உலகின் பாராமுகம் மற்றும் சுயநலப் போக்கின் உச்சமா..? 



உணவு மற்றும் தண்ணீர் தேடி வாரக்கணக்கில் அலைந்து திரிந்து பல மைல் தூரம் நடந்து, டடாப் (Dadaab) என்னும் இம்முன்று நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் நோக்கி படையெடுத்து வரும் மக்கள், இறுதியாக அகதிகள் முகாம் வந்து சேரும்முன் உடன் வந்த குழந்தைகள் பிணமாகிப் போகின்றன என தாயவள் அழுகிறாள். அவளின் கண்ணீரும் இமைகளைத் தாண்டும்முன் வெப்பத்தில் உறைந்து போகின்றது. களைப்பு மறந்து புகழிடம் கிடைத்த மகிழ்ச்சியில் முகாம் நோக்கி விரைய  வாசலிலேயே தடுக்கப்பட்டு பதிவு செய்வதற்க்காக நாள்கணக்கில் காத்துகிடக்க வேண்டிய கொடுமை. நம்மை உறக்கம் தொலைக்க வைத்த பல இரவுகளின் தொடர்ச்சி.        

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி இன்றைய நாள்வரை. 
  • கிட்டத்தட்ட 1 கோடி மக்கள் கடுமையான வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தினமும் சுமார் 1500 பேர் வரையிலான மக்கள் முகாம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
  • 90,000 பேருக்காக ஏற்படுத்தப்பட்ட Dadaab அகதிகள் முகாமில் பாதிக்கப்பட்டோரின் வருகை மிக விரைவில் 500,000த்தை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.    
உலகநாடுகள் தங்கள் ஆயுதம் வாங்கும், கேளிக்கைக்கான, ஆடம்பரத்திற்க்கான செலவில் ஒரு சதவிகிதம் கொடுத்தாலே அழிவின் விழிம்பில் வாழ்வோரின் வாழ்நாள் நீட்டிக்கப்படும். ஏனோ இந்த ஏற்றத்தாழ்வுகள்.? 



தோழர்களே, இதற்கு நம்மால் என்ன செய்துவிட முடியும் என நினைக்கிறீர்களா? இதோ ஐக்கிய நாடுகள் சபையின் இணையத்தில் நீங்கள் என்ன செய்ய முடியும் என விவரித்துள்ளனர். முடிந்தவரை நம்மால் இயன்றதை செய்வோம், அறிந்தோர் அனைவரிடமும் இவ்விடயத்தை எடுத்துச் செல்வோம்.


நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. - குறள்

பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்கு கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

வாழிய தாய்தமிழ்
அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா

Saturday, July 9, 2011

பணப்படுகொலை...!!


அடிப்படை உரிமைகளுக்காக, எல்லைப் பிரச்சினைகளுக்காக, மானப் பிரச்சினைகளுக்காக, பொருளாதார பங்கீடு தொடர்பாக இரு இனக்களினூடக பிரச்சினைகள் இருக்குமென்றால் அது அப்பகுதியின் அல்லது ஒரிரு நாடுகளின் எல்லைகுள்ளாக மட்டுமே உருவாகி முடிந்துபோகும். எந்த இனம் பெரும்பான்மை ஆயுதம்பலம், பணபலம் ஓங்கிநிற்கிறதோ அதுவே ஆதிக்கம் செலுத்தம் சண்டைகள் முதல் மாபெரும் போர்கள்வரை அவர்களின் கையே ஓங்கி நிற்க்கும். அவர்களால் ஏற்படுத்தப்பட்ட மனித இனத்திற்க்காக எதிரான குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் எக்காலத்திலும் நினைத்துப்பார்க்க முடியாததாக இருக்கும். இனப்படுகொலையென உலக சட்டதிட்டங்களால் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் எவ்வித சட்ட திட்டங்களுக்கும் உட்படாமல் கடந்த 10 வருடங்களாக தீவிரவாததிற்க்கு எதிரான போர் என ஆரம்பித்து இன்று புரட்சிக்கு ஆதரவான போர்வரை லட்சக்கணக்கான மக்கள் எவ்விதமான ஒரு தடயமும் இன்றி இந்த நாள்வரை அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பேரவலம்..! கேட்க நாதியில்லை, உதவிட யாருமில்லை, உயிருக்கு உத்தரவாதமில்லை, உறங்கும் இரவின் விடியல் நிச்சயமில்லை, உண்ணும் உணவில் - சுவாசிக்கும் காற்றில் கலந்துள்ள கந்தகம், தெருவெங்கும் வீசும் பிணவாடை, இடிந்த கூரையின்கீழ் இரவுப் பொழுதுகள். 


கலாச்சாரத்தின் தொட்டில்கள், உலகுக்கு நாகரீகத்தை கற்று கொடுத்த பல நூற்றாண்டு பாரம்பரியம்,   ஈராக், ஆப்கானிஸ்தானின் நிலை இன்று இதுதான். இவர்களுடன் கைகோர்க்கிறது பாகிஸ்தானும். 

  
இதுவரை இம்மூன்று நாடுகளிலும் ஏற்பட்டுள்ள மொத்த உயிர் பலியின் என்னிகை சுமார் 2,25,000க்கும் மேல். இதுவரை அகதிகளாக ஆக்கப்பட்டு, தாம் முன்பு வாழ்ந்த இடங்கள், தம் பிள்ளைகள் ஓடியாடி விளையாடிய விட்டு முற்றங்கள் வாழத்தகுதியற்ற இடங்களாக மாற்றப்பட்டு இடம் பெயர்ந்தோரின் என்னிக்கை 7,800,000. இவர்கள் அனைவரும் அமெரிக்கப் படைகளால் மட்டும் கொல்லப்பட்டவர்கள் அல்ல அமெரிக்கப் படையினை எதிர்த்து போராடும் குழுக்களாலும் இருபடைகளுக்கும் இடையில் சிக்கி கொண்டவர்களும்.  


தகவல்கள்: costofwar.org
இதற்காக செலவழிக்கப்பட்ட மொத்த தொகை மற்றும் அமெரிக்க மக்களின் தலையில் வரியாக கட்டப்படும் தொகையின் மதிப்பு $3.2 to $4 Trillion US Dollar. அமெரிக்காவின் படையெடுப்பால் அங்கு அமைதிநிலவி ஜனநாயக ஆட்சி அமைந்ததா எனப் பார்த்தோமானால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இனக்குழுக்களின் பிரிவினை அதிகமாக் தலையெடுத்துள்ளது. சொந்த நாட்டில் சோற்றுக்கு அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மனிதகுலத்தின் ஒரு பிரிவு.

போருக்கு முன் பின்னான கணக்கெடுப்புகள் இல்லை, யார் எங்கு இடம்பெயர்ந்தார் என்பதற்கான பதிவுகள் இல்லை. மனிதகுலம் சக மனிதகுல ஏகாதிபத்தியதால் பாரிய இழப்பை சந்தித்து அழிவின் விழிம்பில். பேரழிவிற்க்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தப்படுமா..? மக்கள் திரும்பவும் தம் இடங்களுக்கு மீள் குடியமர்த்தப்படுவார்களா..? அவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுமா..? அவர்களின் எதிர்காலம்தான் என்ன..? எந்த கேள்விக்கும் விடையில்லை. ஆழம் தெரியாமல் காலைவிட்டு ஆழியில் சிக்கிகொண்ட ஏகாதிபத்திய கழுகானது ஓரிரு ஆண்டுகளில் தன் படைகளை திரும்பப்பெரும் பட்சத்தில், அவர்கள் எந்த நோக்கத்திற்க்காக இப்போரை ஆரம்பித்தார்களோ அது நிறைவேறியதா என்றால்..? ஆம் இல்லை என்ற மாயையே மிஞ்சுகிறது.  

தீவிரவாதத்தை வளர்த்து, அதையே ஆதரித்து உலகநாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் முதல் குற்றவாளி ஏகாதிபத்திய அமெரிக்கா என்பதில் யாருக்கும் மாற்றுகருத்து இருக்க முடியாது. அதனால்தான் முன்பைவிட தீவிரவாதத்தின் கை பலவழிகளில் மேலும் ஓங்கியிருகிறது என்பது மட்டும் நிதர்சனமாகிறது. இன்றுவரை லிபியாவில் புரட்சிப்படைகளுக்கான ஆதரவும் இதையே காட்டுகிறது. 


பாரிய பேரழிவில் நிற்கும் இந்நாடுகளின் நிலைகுறித்து ஐக்கிய நாடுகள் சபை ஒரு விசாரணைக்குழுவை அனுப்புமா? உலக குற்றவியல் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்..?? மேலும் இவற்றுக்கெல்லாம் உலக சமூகம் எத்தகைய முன்னெடுப்புகளை வைத்திருக்கிறது என்றால் ஒன்றும் இல்லை, இருப்பது ஒன்றுதான் அங்கு பிறந்த பிஞ்சுக்குழந்தையின் பாதத்தின் முதல் அடி கந்தக மண்ணின் மீதுதான் என்பது அதன் பிறபுரிமையாகிப் போனதைத் தவிர.                    

வாழிய தாய்தமிழ்
அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா

Friday, July 8, 2011

புரட்சி செய்...!!


புது இரத்தம் பாய்ச்சுவோம்
யுத்தக் கொடியினை ஏற்றுவோம்..
இளைய படையென கூடுவோம்
தோள் வலிமையை காட்டுவோம்…

நினைவில்
வறியவர் இழிநிலை நிறுத்தி;
முட்டி மோது இலக்கை தெறித்து,
விழும் வேகம் தேக்கிடு
எழும் உயரம் நீட்டவே….

நாம்…
அன்பின் காலுக்கு செருப்பு
அடக்கும் காலுக்கு நெருப்பு
தலை நிமிர்ந்தே நடந்திடல் சிறப்பு
என்றும் நிமிர்ந்தே எரியும் நெருப்பு…

தோழா…
அழுதிடும் ஈனக் குரல் எரித்து
எழுந்திடு புரட்சிக் குரல் தரித்து…
காற்றினில் தூசாய் இரு
எதிரியின் கண்ணுள் விழு..

அட…
கொடுத்துப் பெறுவது இரவலடா
கொள்கையில் நிற்பது உரிமையடா
கொள்ளையர் விரட்டிடல் கடமையடா
நீதி வேண்டில் செய்திடு கிளர்ச்சியடா….

என்றும்…
புரட்சி செய்திடு புது உலகம் பிறக்கவே
அதிலே நிலைத்திடு நன்நிலையில் சுழலவே
புரட்சி செய்திடு புது இரத்தம் பாய்ச்சவே
அதிலே நிலைத்திடு அதன் ஓட்டம் நிகழவே…

வாழிய தாய்தமிழ்
அன்புடன்.
ஜெகதீஸ்வரன்.இரா

மனக்கண்ணாடி



மனம் எரியும் தருணங்களில்
நெஞ்சில் விழும் உருவங்களில்
உயிர் நகர மறுக்கும் பயணங்களில்
நீ தொட்டுத் தழுவி
வெற்றிடமாகிப் போன தோள்களுடன்
கடலோரம் நடக்கையில்
அந்த அலைகள் மட்டும்
துணை நிற்க்கின்றன
என் மனக் கண்ணாடியாய்
ஆர்ப்பரித்து...!!

வாழிய தாய்தமிழ்
அன்புடன்.
ஜெகதீஸ்வரன்.இரா